தமிழ்நாடு

வள்ளலார் சத்திய ஞான சபையில் 152ஆவது தைப்பூச விழா! எழுதிரை நீக்கி அருளிய ஜோதி தரிசனம்!

webteam

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச விழாவில், ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152 வது தைப்பூச விழாவில் எழுதிரை நீக்கி காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ”அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்று ஜோதி வடிவான வடலூரில் 7 திரை நீக்கி ஆறு முறை ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

மனிதருக்குள் ஆசை, கோபம், தன்னலம், பொய்மை, வன்மம் ஆகிய பொல்லாத குணங்கள் மனிதனை பாழாக்கி விடுகிறது. இதனால் இந்த கெட்ட குணங்கள் நீங்கினால் தான் ஜோதி தெரியும் என்று கருப்பு, நீளம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு திரை நீக்கி மனிதனுக்குள் இருக்கும் ஏழு தவறான குணங்கள் அகன்றால் தான் ஜோதி தெரியும் என்று உணர்த்தும் வண்ணமாக, இந்த எழுத்திரை நீக்கி ஆறு மணிக்கு ஆறுமுறை ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

தை மாதம் பூச நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாளில் ஆறு முறை ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு இருந்த காரணத்தினால் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஐந்து லட்சத்திற்கும் அதிகமான சன்மார்க்கர்கள் வரும் காரணத்தினால், தற்போது போலீசார் அதிகளவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 6:00 மணி, பகல் 10 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி, நாளை காலை 5.30 மணி என ஆறு முறை எழுத்திரைநீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இதற்காக உலகம் முழுவதும் இருந்து சாதுக்கள்ளும் இங்கு குவிந்துள்ளார்கள். காணும் திசையெல்லாம் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்படுகிறது. “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என பாடிய வள்ளலார் பிறந்த மண்ணில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் திரும்பும் திசையெல்லாம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் 1867இல் வள்ளாலர் நிறுவிய அன்னதான கூடத்திலும் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. வள்ளலார் திருக்கரங்களால் 1867 இல் பற்றவைக்கப்பட்ட நெருப்பு கனல் இன்று வரை அணையாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இது உலக அதிசயம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

எத்தனை லட்சம் பேர் வந்தாலும் அத்தனை லட்சம் பேருக்கும் அன்னதானம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எந்த திசை சாலையில் சென்றாலும் சன்மார்க்கர்கள் அன்னதானம் வழங்கிக் கொண்டே இருப்பார்கள், இதனால் வரும் பக்தர்கள் யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மையாக இருந்துவருகிறது.