மரணத்திற்கு பிறகு என்ன என்பது யாரும் அறியாத ஒன்று. ஆனால், இறந்தவரின் ஆன்மா திருப்தியடையாமல் இருப்பதாக சிலர் நம்புவது உண்டு. அப்படிப்பட்ட நம்பிக்கையில், இறந்தவரின் ஆன்மாவை சாந்தியடைய வைக்கும் விநோதமான பழக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நடந்துவருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மேட்டுக்கடை மோட்டூரை சேர்ந்த மாதப்பன் என்பவர் 10 நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்துவிட்டார். இவருக்கான இறுதிச்சடங்குகளை செய்துவிட்ட நிலையில், மேலும் ஒரு விநோத சடங்கை மேற்கொண்டனர் உறவினர்கள். அவர் உயிர்விட்ட இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்து, அங்கிருந்து நூல்கட்டி வீடு வரை கொண்டுவரும் இந்த விநோத சடங்கு மூலம் வீடு தெரியாமல் சுற்றும் ஆன்மாவுக்கு வீட்டுக்கான வழியை காட்டி அதனை சாந்தியடையச் செய்வதாக இவர்கள் கூறுகிறார்கள்.
இறந்த இடத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் வரை நூல் மூலம் ஆன்மாவுக்கு வழிகாட்டிய இந்த சம்பவத்தின் மூலம் இறந்தவர் உயிர் வீடு வந்து சேர்வதாக நம்புகிறார்கள் கிராம மக்கள்.