தமிழ்நாடு

நெல்லையில் 144 தடை உத்தரவு

Rasus

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரை காரணமாக நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

நெல்லை மாவட்டம் முழுவதும் வரும் 23ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இந்த தடை உத்தரவை பிறப்பித்தார். ராமராஜ்யத்தை வலியுறுத்தும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரை கேரள எல்லைப்பகுதியான செங்கோட்டை வழியாக செல்லவிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு வரும் 23-ஆம் தேதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என நெல்லை மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் கூறியுள்ளார். 144 தடை உத்தரவால் செங்கோட்டை மற்றும் புளியங்குடி பகுதிகளில் மட்டும் 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 32 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கியது. ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது, ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடங்கப்பட்ட இந்த ரத யாத்திரை மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக ராமேஷ்வரத்தில் முடிவடைகிறது. இந்த ரத யாத்திரைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.