சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே தனிநபர் மற்றும் அவரின் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற்ற பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், சென்னையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டாலே பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றார். சென்னையில் 12 அரசு பரிசோதனை மையங்கள் மற்றும் 18 தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 30 கொரோனா பரிசோதனை மையங்கள் இருப்பதாகக் கூறினார்.
இங்குப் பரிசோதனை மேற்கொள்பவர்களின் பெயர், முகவரி, வயது, பாலினம், தொழில் விவரம், குடும்பத்தினரின் தகவல்களை உடனே மாநகராட்சி அலுவலகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றார். அத்துடன் கொரோனா பரிசோதனை மையங்களைக் கிருமி நாசினிகள் தெளித்து அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் எனவும், வீடுகளுக்குச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவ ஊழியர்களுக்கு உரிய உபகரணங்கள் தர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.