செய்தியாளர்: திவ்யஸ்வேகா
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் காளியம்மன், பட்டாளம்மன், விநாயகர் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களின் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது. இறுதி நாளான செவ்வாய்க்கிழமை இரவு கோயில் அருகே உள்ள நாடக மேடையில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பார்க்க அம்மாபட்டி மற்றும் கொடிக்கால்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் கிராம மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடனம் ஆடியுள்ளனர்.
இதனை தட்டிக்கேட்ட ஊர் மக்களை இரும்புக் கம்பி மற்றும் கட்டையால் கொடூரமாக தாக்கிவிட்டு,; அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் பூத்தாம்பட்டியை சேர்ந்த பாண்டியன், வேல்முருகன், முத்துச்சாமி, ரத்தீஷ்வர்மா, லோகநாதன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அம்மாபட்டியைச் சேர்ந்த ஆல்பர்ட் சேவியர் ஜீவா (32), பாலமுருகன் (21), கோபிநாத் (25), செல்வம் (21), ரவிச்சந்திரன் (22), கொடிக்கால்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் (24), ஜோதி முனீஸ் (24), மதன் பாபு (22), தங்க முனீஸ்வேல் (23), விஜயபாஸ்கர் (23), குஜிலியம்பாறை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த தீபன் (22) மற்றும் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.