ஏவி மேம்பாலம்
ஏவி மேம்பாலம்  PT Desk
தமிழ்நாடு

மதுரை சித்திரை திருவிழா: விஐபி வாகனங்களை நிறுத்த 138 ஆண்டு பழமையான மேம்பாலச் சுவர் உடைப்பு

PT WEB

மதுரையில் கடந்த 1ஆம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று கள்ளழகர் எதிர்ச்சேவையும், நாளை (மே 5) அதிகாலை 5.45 - 6.15 மணிக்குள் கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது.

கள்ளழகா்

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து செய்து வருகிறது. இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் முக்கியஸ்தர்கள், அமைச்சர்கள், அவர்களின் குடும்பத்தினர், தொழில் அதிபர்கள், நீதிபதிகள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். நிரம்பி வழியும் பக்தர்களால் மதுரையே திமிலோகப்பட்டு வருகிறது.

இதில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் முக்கிய இடமான வைகையின் வடகரை மற்றும் தென்கரையை இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் (1886ம் ஆண்டு) ஆல்பர்ட் விக்டர் (Albert Victor - AV) என்றொரு பாலம் கட்டப்பட்டது. இந்த ஏவி மேம்பாலம் 300 மீட்டர் நீளமும், 14 அழகிய ஆர்ச் வளைவுகளும் கொண்ட சிறப்புமிக்க பாலமாகும். மதுரை நெல்பேட்டைக்கும், கோரிப்பாளையத்திற்கும் இடையே உள்ள இந்த மேம்பாலம் 138 வருடங்களுக்கு பிறகும் தன்னுடைய பலத்தை இழக்காமல், அதே உறுதியுடன் மதுரையின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு தற்போதும் பெரும் உதவியாக இருந்துவந்தது, வருகிறது.!

ஏவி பாலம் சேதம்

இந்த ஏ.வி.மேம்பாலம் அருகில் தான் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறும்.

வைகை

இந்த நிலையில் பழமையான இந்த பாலம், இவ்வருடம் கள்ளழகர் சித்திரை திருவிழாவின்போது வரும் விஐபி வருகைக்காக தற்போது சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஏவி மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பாதசாரிகளின் நடைபாதையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

138 ஆண்டு பழமையான பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள், பாதசாரியாக செல்வோர் நடந்து செல்லும் பாதை ஆகியவற்றை விஐபிகளுக்காக உடைத்து தற்காலிக பாதை ஏற்படுத்தி உள்ளது.

ஏவி பாலம் சேதம்

“இதுபோன்ற செயல்கள் ‘இறைவன் முன் அனைவரும் சமம்’ என்பதை கேள்விக்குறியாக்குகிறது. பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத போது, விஐபிகளுக்கு தனி பாதை அமைப்பது தவறானது” என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தன்னார்வலர்

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்ட போது, “அமைச்சர்கள், விஐபிக்கள், நீதிபதிகள் செல்வதற்காக இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்லும் பாதையில் முக்கியஸ்தர்கள், விஐபிக்களை அழைத்து செல்லும் போது நெருக்கடி ஏற்படும் என்பதால் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.