தமிழ்நாடு

பறிமுதல் ஆன 1300 கிலோ கஞ்சா ஒரே நேரத்தில் அழிப்பு.. மாஸ் காட்டிய சென்னை கமிஷனர்!

Sinekadhara

சென்னை பெருநகர பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1300 கிலோ கஞ்சா போதைபொருட்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் அழிக்கப்பட்டது. 

செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் மருத்துவக்கழிவுகளை எரியூட்டும் பகுதியில் சென்னை பெருநகர பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் 37 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1300 கிலோ கஞ்சாவை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வடக்குமண்டல இணை இயக்குநர் ரம்யா பாரதி ஆகியோர் முன்னிலையில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை அழித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை பெரிநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ’’சென்னை பெருநகர பகுதியில் உள்ள காவல்நிலையங்களில் கடந்த 5 மாதங்களில் 37 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1300 கிலோ கஞ்சா போதைபொருட்கள் இன்று அழிக்கப்பட்டது. இதுவரையில் 404 வழக்குகளில் 639 பேர் கைது செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகிறது.

மேலும் தமிழகத்தில் நடைபெற்ற கஞ்சா வேட்டைகளில் அதிக அளவில் ஆந்திரா, திரிபுரா பகுதிகளிலிருந்து ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கொண்டுவந்து விற்பனை செய்த கஞ்சா வியாபாரிகள் 115 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்பவர்களை பற்றி தகவலறிந்து அவர்களை கைது செய்ய காவல்துறையினர் செல்லும்போது அவர்களும் கஞ்சா போதையில் இருப்பது போலீசாருக்கு சவாலாக உள்ளது. சென்னையில் இதுவரையில் 224 வழக்குகள் முடிந்து 2ஆயிரம் கிலோ கஞ்சா போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

தமிழகத்தில் போதைபழக்கம் குறித்த சர்வே தற்போது எடுக்கப்படவுள்ளது. உணவு பாதுகாப்புத்துறையினர் மூலமாக போதைப்பொருட்களான குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்யும் 100 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் காவல்த்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 42 பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது. கஞ்சா போதை பழக்கத்தினால் 15 சதவீத்த்திற்க்கு மேலுள்ள இளைஞர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை போதை பழக்கத்தில் இருந்து வெளிக்கொண்டுவர மறுவாழ்வு மையங்கள் அமைக்கபட உள்ளது’’ எனத் தெரிவித்தார்.