வேலூரில் கடைக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் மகன் இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புலிக்குட்டை கிராமத்தை சேர்ந்த முதியவர் வெங்கடாசலம் (75). இவரது மகன் குண்டுமணி என்கின்ற கிருஷ்ணன். இவர்கள் இருவரும் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடையில் பொருள் வாங்க வந்த 13 வயது சிறுமியை அப்பா, மகன் இருவரும் வீட்டிற்குள் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனை அந்தச் சிறுமியோடு வந்த தோழி பார்த்துவிட்டு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். பிறகு அந்தச் சிறுமியை அவள் தோழி இழுத்துச் சென்று அவருடைய அம்மாவிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து சிறுமியின் அம்மாவும், ஊர் பொதுமக்களும் இணைந்து விசாரித்துள்ளனர். அத்துடன் அப்பா, மகன் இருவரும் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் இருவரையும் அழைத்து சென்று காவல்துறையினர், காவல் ஆய்வாளர் பழனி தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரும், வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் எனச் சிறுமியை மிரட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.