தமிழ்நாடு

தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு - தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு - தேர்தல் ஆணையம்

rajakannan

தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் வரும் 19ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 18ஆ‌ம் தேதி 2-ம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் தேனி மக்களவைத் தொகுதி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை கோவையிலிருந்து 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. 10 பெட்டிகளில் இருந்த இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் பிரிவு வட்டாட்சியர் மணவாளன் உள்ளிட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தனி அறையில் வைத்துப் பூட்டி சீல் வைத்தனர். 

இந்த விவகாரத்தை தேனி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சாகுல் அமீது உள்ளிட்ட கட்சியினர் வெளிப்படுத்தினர். பின்னர் திமுக கூட்டணிக் கட்சிகள், அமமுக, மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கு திரண்டு,‌ வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விவரங்களை கேட்டனர். அப்போது, இடைத்தேர்தல் நடைபெற்ற ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற இருப்பதாக தேர்தல் பிரிவு வட்டாட்சியர் மணவாளன் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன அரசியல் கட்சியினர், எந்த அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுக்காத நிலையில் ‌மறுவாக்குப்பதிவு எதற்கு என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தருமபுரி, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அத்துடன் தேனி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 15 மக்களவைத் தொகுதிகளில் 46 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் வரும் 19ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 8 வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தருமபுரி - 8
தேனி - 2
திருவள்ளூர் - 1
கடலூர் - 1
ஈரோடு - 1