ஆரணி அருகே 12ஆம் வகுப்பு தேர்வு பயத்தால் மாயமான 2 மாணவிகள் சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த நெசல் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் சினேகா மற்றும் சுவேதா. தோழிகளான இவர்கள் இருவரும் இந்த ஆண்டு எழுதிய 12ஆம் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என நினைத்துள்ளனர். இதனால் வீட்டில் திட்டுவார்கள் என்று பயந்த அவர்கள், வீட்டில் சொல்லாமலே இருசக்கர வாகனத்துடன் தலைமறைவாகியுள்ளனர்.
இதையடுத்து பதறிப்போன மாணவிகளின் பெற்றோர் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் சென்னை அடையாறு அருகே இரண்டு மாணவிகள் தற்கொலை செய்ய முயற்சிப்பதைக் கண்ட அப்பகுதி காவல்துறையினர், அவர்களை மீட்டு சாஸ்திரி நகர் ஜே5 காவல்நிலையத்தில் தங்க வைத்துள்ளனர். அவர்களிடம் விசாரித்த போது, இருவரும் ஆரணியில் இருந்து வந்த மாணவிகள் சினேகா மற்றும் சுவேதா என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆரணி காவல்நிலையம் மூலம் மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறும் அவர்களின் பெற்றோர், “நாங்கள் எங்கள் மகளை எதுவும் திட்டவில்லை. எந்த வித கேள்வியும் கேட்கவில்லை. எங்களிடம் எதுவும் கூறமால் அவர்களே இந்த முடிவை எடுத்துள்ளனர். எதனால் இவ்வாறு செய்தார்கள் என்றே தெரியவில்லை” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.