கோவை மாவட்டம் சோமனூரில் ஆசிரியர் திட்டியதால் 12-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சோமனூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 12-ம் வகுப்பு பயின்று வந்த அருள் செல்வன் என்கிற மாணவன் நேற்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவன் தற்கொலைக்கு வேதியியில் ஆசிரியரே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேதியியல் ஆசிரியர் தன்னை மற்றவர்கள் முன்னிலையில் அதிகமாக திட்டுவதாகவும், அது தனக்கு அசிங்கமாக இருப்பதாகவும் மனமுடைந்த மாணவன் அருள்செல்வன் கடந்த வாரமே தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது தந்தையும், பள்ளி தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து முறையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளார். பெற்றோர் அளித்த புகாருக்கு பின் மீண்டும் பள்ளி சென்ற அருள்செல்வனை வேதியியல் ஆசிரியை சங்கீதா மீண்டும் திட்டியதாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியரிடமே என்னை பற்றி சொல்லிக் கொடுக்கிறாயா என்றும் அருள் செல்வனிடம் கோபமாக நடந்திருக்கிறார். இதனால் நொந்துபோன மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வேதியியல் ஆசிரியை சங்கீதா மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே ஆசிரியை சங்கீதா விரைவில் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது. கடந்த 24-ஆம் தேதி வேலூர் அருகே பட்டினப்பாக்கத்தில் ஆசிரியர்கள் திட்டியதால் 4 மாணவிகள் ஒரே நேரத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.