நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள சிங்ளாந்தபுரத்தில், தனது தாய் - தந்தை தனது இறப்பிலாவது ஒன்று சேர வேண்டுமென கடிதம் எழுதி வைத்து விட்டு 12-ம் வகுப்பு மாணவரொருவர் தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மேகலா. இவர்களது மகன் அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். வீட்டில் குடும்பத்தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக ரவி மற்ற்றும் மேகலா தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களின் மகன் மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன்காரணமாக தற்போது அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
தற்கொலைக்கு முன்பு, மாணவர் கடிதமொன்றையும் எழுதி வைத்திருக்கிறார். அந்த கடிதத்தில் தனது இறப்பில் தாய் தந்தை இருவரும் ஒன்றாக சேர வேண்டும் எனவும் மேலும் தனது அம்மா மற்றும் அக்காவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், `நான் எங்கும் செல்லவில்லை. வீட்டின் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பேன்’ என எழுதியிருந்திருக்கிறார். கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் காலையில் குடும்பத்தினர் எழுந்து பார்க்கையில் தருண் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து குடும்பத்தினர் பேளுக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கடிதம் மற்றும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தருண் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தைப் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது 12ம் வகுப்பு தேர்வு நடைபெறும் நிலையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழிப்புணர்வு: தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.