அரக்கோணத்தில் இருந்து திருத்தணி வழியாக பீகாருக்கு நடந்து செல்ல முயன்ற, 120 தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவில், 150-க்கும் மேற்பட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டட பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொடர் ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த அவர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல தீர்மானித்து, 120 பேர் அரக்கோணத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் நடை பயணம் மேற்கொண்டனர்.
மாநில நெடுஞ்சாலை மற்றும் ரயில் தண்டவாளம் வழியாக பயணம் செய்தால் போலீஸ் மற்றும் வருவாய் துறையினரிடம் மாட்டிக் கொள்வோம் என எண்ணி வடமாநில தொழிலாளர்கள் வயல்வெளி வழியாக திருத்தணி நோக்கி நடந்து சென்றனர்.
அப்போது, திருத்தணி பெரியார் நகர் அருகே வடமாநில தொழிலாளர்கள் நடந்து சென்றதை கண்டறிந்த திருத்தணி இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று தடுத்தி நிறுத்தினர். பின், வருவாய் கோட்டாட்சியர் சொர்ணம் அமுதாவிடம் போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் கோட்டாட்சியர் அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை உயர்அதிகாரிகளிடம் பேசி, ராணிப்பேட்டையில் இருந்து செல்லும் சிறப்பு ரயில் மூலம் அவர்களை அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, 120 வடமாநில தொழிலாளர்களை மீண்டும் அரக்கோணத்திற்கு திரும்பி அனுப்பப்பட்டனர்.