தமிழ்நாடு

விழுப்புரம்: அடிப்படை வசதிகளின்றி அவதியுற்று வரும் இருளர் இன குடும்பங்கள்

EllusamyKarthik

விழுப்புரம் அருகே நீண்ட நாட்களாக அடிப்படை வசதி கூட இல்லாமல் தவித்து வருவதாக இருளர் இன மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் அடுத்துள்ளது எண்ணாயிரம் என்கிற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 12 இருளர் குடும்பங்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஏரிக்கரை ஓரத்தில் இவர்களுக்கு அரசு மனைப்பட்டா வழங்கியுள்ளது. மனைப்பட்டா வழங்கி பல ஆண்டுகளாகியும் அவர்களின் எந்த அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படாமலேயே இருந்து வருகிறது.

குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வடிகால் வசதி போன்றவையான அடிப்படை தேவைகள் கூட இல்லாத இக்கட்டான சூழ்நிலையில் அந்த 12 குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கு யாரும் முன் வரவில்லை என்கிறார்கள் இவர்கள். 

பழங்குடி இருளர்கள் பெரும்பாலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்ந்து வருவது வழக்கம். ஒரு காலத்தில் பாம்பு, உடும்பு போன்ற ஊர்வன வகைகள் பிடிக்கும் தொழிலாக அவர்கள் செய்து வந்திருந்தாலும் தற்காலத்தில் அதிகமாக செங்கல் சூளையில் வேலை செய்யும் நபர்களாகவே இருந்து வருகிறார்கள். போதுமான கல்வியறிவு இல்லாமலேயே வாழ்ந்து வரும் இவர்களுக்கு சாதி சான்று பெறுவது என்பது மிகப்பெரிய சவாலாக இன்றும் இருந்து வருகிறது.

அதேபோன்று குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தரப்படவில்லை. இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று தான் குடிநீர் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள். இந்த பகுதியில் அரசு உடனடியாக மின்சார வசதி, குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக இருந்து வந்தாலும் எதிர்காலத்தில் தங்களுடைய வாழ்வாதாரம் சிறக்க அரசு இலவச வீடு கட்டித்தர வேண்டும் என்கிற கோரிக்கையும் முன் வைக்கிறார்கள். 

- ஜோதி நரசிம்மன்