என்எல்சி இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் ஆபரேட்டராக இருந்த கருணாநிதி என்ற ஒப்பந்தத் தொழிலாளி, கடந்த சனிக்கிழமையன்று (ஜன. 25) இரவு சுரங்க வளாகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வலியுறுத்தி, வேப்பங்குறிச்சி கிராம மக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் இரண்டாவது சுரங்க வாயிலில் திரண்டு நேற்று (ஜன 26) முற்றுகையிட்டனர்.
காலை ஒன்பதரை மணிக்கு தொடங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், என்எல்சி நிறுவனத்துடன் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், சுரங்கத்துக்கு இரண்டாவது பணிக்கு வந்த தொழிலாளர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். இதன் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உயிரிழந்த தொழிலாளியின் மகளுக்கு நிரந்தர தன்மை கொண்ட ஒப்பந்தப் பணி வழங்குவதாக என்எல்சி நிர்வாகம் கடிதம் அளித்தது. இதனால், 12 மணி நேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.