தமிழ்நாடு

ஆறு ஆயிரத்திற்காக 6 வருடங்களாக கொத்தடிமையாக இருந்த குடும்பம் மீட்பு

ஆறு ஆயிரத்திற்காக 6 வருடங்களாக கொத்தடிமையாக இருந்த குடும்பம் மீட்பு

webteam


காஞ்சிபுரம் அருகே மரம் வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 28 பேரை மாவட்ட நிர்வாகம் மீட்டுள்ளது.

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் மரம் வெட்டும் தொழில் நடத்தி வருபவர் முருகன். இவரிடம் ராஜேந்திரன் என்பவர் ரூ.6 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். அதற்கு பதிலாக ராஜேந்திரன், அவரது மனைவி மற்றும் அவரது இரு பிள்ளைகள் என அனைவரும் குடும்பத்துடன் மரம் வெட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். 6ஆயிரம் ரூபாய்க்காக 6 வருடங்களாக அவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாரத்துக்கு தலா. ரூ.150 சம்பளம் மட்டுமே கொடுக்கபட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ராஜேந்திரன் தனது குடும்பத்துடன் அங்கிருந்து தப்பித்து மகாபலிபுரம் அருகேயுள்ள  உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். தப்பிச் சென்றவர்களைத் தேடி கண்டுபிடித்த முருகன் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவ்விவகாரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் தலையிட்டு ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை முருகனிடம் இருந்து மீட்டுள்ளனர்.

மேலும் முருகனிடம் வேலை பார்த்த மற்ற கொத்தடிமை தொழிலாளர்களையும் கொத்தடிமை மீட்பு சங்கத்தின் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் மீட்டுள்ளது. மொத்தம் 7 குடும்பங்களைச் சேர்ந்த 12 சிறுவர்கள் உட்பட 28 பேரை அவர்கள் மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.

இது குறித்து டைம் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேசியுள்ள காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியர், மீட்கப்பட்டவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நெமலி, படூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் 2 முதல் 6 வருடங்கள் வரை கொத்தடிமைகளாக பணியாற்றி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு பள்ளிகளுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

28 பேரை கொத்தடிமைகளாக வைத்து மரம் வெட்டும் தொழில் நடத்தி வந்த முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.