தமிழ்நாடு

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் இதுவரை 12 பேர் கைது - மாமல்லபுரம் ஏஎஸ்பி

webteam

திருப்போரூர் அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற விவகாரத்தில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் ஏஎஸ்பி தெரிவித்துள்ளார்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் குமார் ஆகியோர் கோயில் நிலத்தில் சாலை அமைக்க 50 பேருடன் வந்தனர். இதனை திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்தது. இதில் லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு குண்டு காரிலும், இன்னொரு குண்டு ஸ்ரீநிவாசன் என்பவரின் முதுகு பகுதியில் பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக எம்.எல் ஏ இதயவர்மன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ இதயவர்மன் உட்பட 7 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க செங்கல்பட்டு  நீதிமன்றம்ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற விவகாரத்தில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் கூடுதல் எஸ்பி தெரிவித்துள்ளார். எம்எல்ஏ இதயவர்மன் தரப்பில் 11 பேரும் அவருக்கு எதிராக புகார் கொடுத்தவர் தரப்பில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்