செந்தில்குமார் - சந்திரபாண்டி
செந்தில்குமார் - சந்திரபாண்டி PT WEB
தமிழ்நாடு

மதுரை | பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொலை - வளர்ப்பு பெற்றோர் கைது!

webteam

மதுரை செய்தியாளர் - பிரசன்னா

மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் தாய் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். தந்தை வேறு திருமணம் செய்து கொண்டதால், சிறுமி மற்றும் அவரது அண்ணன் இருவரும் வளர்ப்பு பெற்றோரான பெரியம்மா, பெரியப்பா பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த, சில மாதங்களுக்கு முன்பாக சிறுமியின் அண்ணன் கண்மாயில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து சிறுமி மட்டும் தனது வளர்ப்பு பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.

சந்திரபாண்டியை கைது செய்த போலீசார்

கடந்த வியாழக்கிழமை மாலை சிறுமி கழிவறைக்குள் சென்றுவிட்டு கதவு திறக்கவில்லை என கூறி அருகில் உள்ளவர்களைச் சிறுமியின், வளர்ப்பு பெற்றோர் கூறி அழைத்துள்ளனர். அப்போது அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது பெற்றோரே கதவை உடைத்து சிறுமியைத் தூக்கி வந்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளனர். அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுமி உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை

இதையடுத்து சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமி உயிரிழந்த போது, சிறுமியுடன் வீட்டில் இருந்த வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் அழைத்துச்சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ராணுவ வீரராக இருந்தவரும் சிறுமியின் வளர்ப்புத் தந்தையுமான செந்தில்குமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமாகியுள்ளது. அச்சமயத்தில் சிறுமி கத்தியதால் அவரது கழுத்தை நெரித்து இந்த வளர்ப்பு தந்தை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அச்சமயத்தில் அங்கு வந்த செந்தில்குமாரின் மனைவி சந்திரபாண்டி உயிரிழந்த மகளின் உடலைக் கழிவறைக்குள் போட்டுவிட்டு அருகில் உள்ளவர்களை அழைத்து நாடகமாடியதும் தெரிய வந்துள்ளது.

செந்தில்குமாரை கைது செய்து அழைத்து வந்த போது

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ வழக்கின் கீழ் ராணுவ வீரரான செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.