தமிழ்நாடு

சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்கம் அறிக்கை

சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்கம் அறிக்கை

webteam

சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குடியிருப்பின் உரிமையாளர்கள் சங்க தரப்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குடியிருப்பின் உரிமையாளர்கள் சங்க தரப்பில் இன்று விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத மோசமாக நிகழ்வு நடந்துவிட்டதாகவும், இந்த சம்பவத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து, இனி இதுபோன்ற நிகழாமல் தடுக்க மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ‌பணிகளை வெளியாட்களிடம் அளிக்காமல், குடியிருப்பைச் சேர்ந்தவர்களே மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குடியிருப்பின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் குறித்து கேள்வி எழுப்ப தயங்கக்கூடாது என்றும், பாதுகாப்பிற்கு அனைவரும் கூட்டுப்பொறுப்பு என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியாட்கள் விவகாரத்தில் பெற்றோர், குழந்தைகளின் தாத்தா, பாட்டி ஆகியோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், GOOD TOUCH, BAD TOUCH போன்ற தலைப்புகளில் அவ்வப்போது குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்களை மறைத்து குற்றவாளிகள் தவறிழைக்கின்றனர் என்றும், எனினும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பலப்படுத்தப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.