பெரம்பலூர் அருகே இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு pt
தமிழ்நாடு

பெரம்பலூரில் அதிர்ச்சி.. 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு! நாட்டுமருந்து உட்கொண்டது காரணமா?

பெரம்பலூர் அருகே நாட்டுமருந்து எடுத்துக்கொண்டதால் 11 மாதங்களே ஆன இரட்டை பெண்குழந்தைகள் உயிராழந்ததாக சொல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிழக்குத்தெருவில் வசித்து வரும் கந்தசாமி - தனலெட்சுமி தம்பதியருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு அகிலன் என்ற 7 வயது ஆண்குழந்தை உள்ளது.

இந்நிலையில் கருத்தரித்த மனைவியை விட்டுவிட்டு கடந்த ஆண்டு கந்தசாமி வேலைக்காக துபாய் சென்றுவிட்ட நிலையில், தம்பதியருக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்தது.

உயிரிழந்த இரட்டை பெண் குழந்தைகள்

இந்தசூழலில் பதினோரு மாதமான தனிஷ்ஸ்ரீ மற்றும் ரேஷ்மா ஆகிய இரு குழந்தைகளுக்கும் அண்மையில் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.

பரிதாபமாக இறந்த குழந்தைகள்..

குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் தனியார் மருந்தகங்களில் ஆங்கில மருந்துவாங்கி கொடுத்துள்ளனர். ஆனாலும் குழந்தைகளுக்கு குணமடையாத நிலையில், வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பின்புறத்தில் உள்ள நாட்டு மருந்தான உறை மருந்து வாங்கி கொடுத்தால் குணமாகும் என குழந்தையின் பாட்டி தெரிவித்துள்ளார்.

அதன்படி அதே கிராமத்தைச் சேர்ந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக நாட்டுமருந்து வழங்கிவரும் குடும்பத்தைச் சேர்ந்த சைதானிபீயிடம்  குழந்தைகளுக்கு மருந்து வாங்கி கொடுத்துள்ளனர். நேற்றிரவு மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், வீட்டிற்கு வந்த குழந்தை இருவரும் மூச்சு பேச்சின்றி போக அச்சமடைந்த குடும்பதினர் வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

நாட்டு மருந்து கடை

ஆனால் அங்கு தீவிரத்தை உணர்ந்த செவிலியர்கள்  பெரம்பலூர் அரசு  தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியநிலையில், குழந்தைகளை கொண்டுசென்றுள்ளனர். துரதிருஷ்டவசமாக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தனிஷ்ஸ்ரீ இறந்துள்ளார். மற்றொரு குழந்தைக்கு மூச்சுக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்தாக திருச்சி அரசு மருத்துவமைனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மற்றொரு குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து உடற்மேற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.