துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை விரைவாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி டி.டி.வி. தினகரன் மற்றும் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவை எதிர்த்து திமுகவின் சக்கரபாணி, அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி திமுக மற்றும் அமமுக சார்பில் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை விரைவாக விசாரிக்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். விரைவாக விசாரிக்க முயற்சி செய்தும் முடியவில்லை என்று நீதிபதிகள் கூறினர்.