குரல் பெண் போல் உள்ளதால் பள்ளி ஆசியர் தவறாக சீண்டுவதாக பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் புகார் அளித்த சம்பவம் கரூரில் நடந்துள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாயனூர் அருகில் உள்ள வளையல்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நாகராஜன் புகார் மனு ஒன்றையளித்தார்.
அந்த மனுவில், கருப்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தான் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். தனது குரல் பெண் குரல் போல் உள்ளதால் பள்ளியில் உள்ள ஆங்கில ஆசிரியரான செந்தில்குமார் ஆபாசமாக பேசுகிறார். அதனுடன் தொடக்கூடாத இடத்தில் தொடுகிறார், இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் உள்ளது.
இது குறித்து புகார் கொடுத்தால் என் மீது வீண் பழி சுமத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றி விடுவேன் என மிரட்டுகிறார். நான் பள்ளியின் அவமானம் என்றும் கூறுகிறார். இதனால் பள்ளிக்கு செல்லாமல் உள்ளேன். எனவே, மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.