தமிழ்நாடு

விலக்கு அளிக்க மறுத்த நீதிமன்றம்... இன்று தொடங்குகிறது 10ஆம் வகுப்பு தனித்தேர்வுகள்

விலக்கு அளிக்க மறுத்த நீதிமன்றம்... இன்று தொடங்குகிறது 10ஆம் வகுப்பு தனித்தேர்வுகள்

jagadeesh

10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி இன்று தொடங்க உள்ளது. முன்னதாக இத்தேர்விலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால் தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 21 முதல் தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தனித் தேர்வர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி மாற்றுத்திறனாளி மாணவரின் தந்தை தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 3ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருந்தது.

அந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி மனுதாரர் தொடர்ந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தனிமனித விலகலை பின்பற்றுவதும், முகக்கவசம் அணிவதும் மாற்றுத்திறனாளி மாணவர்களால் சாத்தியமில்லை. அதனால் தனித் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி தனித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவருக்கும், அரசு சார்பில் அவர்களது வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், பரிசோதனை முடிவில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்தனர். மேலும், தனித் தேர்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டதா என்பது குறித்து தமிழக அரசும், மனுதாரரும் 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.