நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு அருப்புக்கோட்டையிலுள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் 4வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த 3 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில், 180 கோடி ரூபாய் பணம் மற்றும் 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செய்யாதுரை, நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்ததாரராக தொழில் செய்து வருகிறார். ரகசிய தகவலின் அடிப்படையில் அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாதுரையின் வீடு, அலுவலகம், உறவினர்கள், தொழிற்கூட்டாளிகள், அவரது நிறுவன ஊழியர்கள், செய்யாதுரையின் பட்டயக் கணக்காளர் உள்ளிட்ட ஏராளமானோரின் இல்லங்களில், கடந்த திங்கட்கிழமை காலை வருமான வரித்துறை திடீரென சோதனை தொடங்கியது. செய்யாதுரையின் நிறுவனங்கள், இணை நிறுவன அலுவலகங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
செய்யாதுரையின் தொழிற்கூட்டாளிகளான தீபக் என்பவரின் தேனாம்பேட்டை இல்லத்தில் இருந்து 24 கோடி ரூபாய் , ரவிச்சந்திரன் என்பவரிடம் இருந்து 28 கோடி ரூபாய், சேத்துப்பட்டைச் சேர்ந்த ஜோன்ஸ் என்பவர் வீட்டில் இருந்து 28 கோடி ரூபாய், செய்யாதுரையின் மகன் நாகராஜனின் உதவியாளரிடம் இருந்து 30 கோடி ரூபாய், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் இளங்கோவின் அலுவகத்தில் இருந்து 4 கோடி ரூபாய் என பல்வேறு இடங்களில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னையில் சேத்துப்பட்டு, பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், 180 கோடி ரூபாய் பணமும், 105 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பணம் மற்றும் தங்கம் தவிர ஏராளமான ஆவணங்கள் மற்றும் முக்கிய தகவல்கள் அடங்கிய 40க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க் மற்றும் பெண் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. செய்யாதுரையின் மூன்றாவது மகன் ஈஸ்வரனின் வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கி உள்ளனர். மேலும், தனது வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்ததை செய்யாதுரை ஒப்புக்கொண்டதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
துணை ஒப்பந்தத் தொகை மற்றும் தொழிலாளர் ஊதியத்தை பலமடங்காக காட்டி கணக்கில் வராத சொத்துகளை சேர்த்ததாக செய்யாதுரை ஒப்புக்கொண்டுள்ளதாக வருமானவரித்துறை கூறியுள்ளது. சென்னையில் நடைபெற்று வந்த சோதனை முடிவுற்ற நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாதுரையின் வீட்டில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறனர். செய்யாதுரையிடமும், அவரது மகன் நாகரானின் உதவியாளர் பூமிநாதனிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.