தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை ஓய்வுப் பெற்ற விஏஓக்களை கொண்டு நிரப்ப அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 12 ஆயிரத்து 616 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் 2 ஆயிரத்து 896 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் ஆயிரம் பணியிடங்களை ஓய்வு பெற்ற விஏஓக்களை கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் நிரப்பிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இதற்கான அரசாணையை பிறப்பித்திருக்கிறது.
அதில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை ஓய்வு பெற்ற விஏஓக்களை கொண்டு நிரப்பவும், இவ்வாறு நியமிக்கப்படும் விஏஒக்கள் ஓராண்டு வரையிலோ அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியமர்த்தப்படும் வரையிலோ பொறுப்பில் இருப்பார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அப்படி பணி அமர்த்தப்படும் விஏஓக்களுக்கு மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உரிய நிபந்தனைகளின் கீழ் இந்த உத்தரவை அமலாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.