தமிழ்நாடு

‘அப்போது கொடிய நோய் தாக்குதல்கள் இல்லை’.. 100வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி

‘அப்போது கொடிய நோய் தாக்குதல்கள் இல்லை’.. 100வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி

webteam

100வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி, தங்களது காலத்தில் கொரோனா போன்ற கொடிய நோய் தாக்குதல்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வசித்து வருபவர் சின்னசாமி. இவரது மனைவி பருவதம் அம்மாள். சின்னசாமி மற்றும் பருவதம் அம்மாள் தம்பதிக்கு மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது குடும்பத்தில் 11 பேரன்கள், 5 பேத்திகள், 19 கொள்ளு பேரன்கள், 14 கொள்ளு பேத்திகள், ஒரு எள்ளு பேரன் என மொத்தம் 55 பேர் உள்ளனர். பருவதம் அம்மாளின் கணவர் சின்னுசாமி இறந்து விட்ட நிலையில் தனியொரு பெண்ணாக தனது குடும்பத்தை கட்டிக்காத்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியுள்ளார்.

இந்நிலையில், அவர்களது விவசாய தோட்டத்திலுள்ள வீட்டில் பருவம் அம்மாள் பாட்டியின் பிறந்தநாளை கொண்டாடினார். கேக் வெட்டுவதை மறுத்த பாட்டி, அவரை வாழ்த்த வந்த அனைவருக்கும் பத்து ரூபாய் பணம் வழங்கி ஆசிகள் வழங்கினார். அனைவரும் பூரண ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று ஆசிர்வதித்தார். இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறை சார்பில் பாட்டிக்கு வாழ்த்து தெரிவித்ததை தொடர்ந்து பழைய நினைவுகளை மெதுவாக கூறினார்.

கணவர் மீதான மரியாதை காரணமாக தற்போது வரை அவரது கணவர் பெயரை கூற மறுத்துவிட்டார். மேலும், இன்றைக்கு உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற பாதிப்புகள் அப்போது இருந்ததா என்ற கேள்விக்கு அப்போது எல்லாம் இதுபோன்ற நோய் தாக்குதல் பயம் இல்லை. அப்போது எங்களது வயலில் விளையும் தானியங்களை உணவாக தயாரித்து சாப்பிடுவோம். அதனால், எப்போதுமே நோய் தொற்றுக்கள் எங்களை தாக்கியது கிடையாது என்றார். மேலும், கடுமையான மழை காலங்களில் ஆற்றில் பெருவெள்ளம் வரும். ஆனாலும், அதனால் எங்களுக்கு எப்போதும் பாதிப்பு ஏற்பட்டதில்லை என்றார்.