தமிழ்நாடு

உத்திரமேரூர் கோயில் நகை குறித்து அரசே முடிவு செய்யும் - அமைச்சர் பாண்டியராஜன்

webteam

100 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நகைகள் என்றால் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் கிராம மக்கள் திருப்பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று கருவறையின் முன்பு இருந்த படிக்கல்லை அப்புறப்படுத்தியபோது துணியால் சுற்றப்பட்ட நிலையில் பழங்கால ஆபரணங்கள் கிடைத்தன. 561 கிராம் எடையுள்ள அந்த பழங்கால ஆபரணங்கள் குறித்து தகவலறிந்த உத்திரமேரூர் வட்டாட்சியர் ஏகாம்பரம், அவற்றை கைப்பற்றச் சென்றபோது அவற்றை ஓப்படைக்க மக்கள் மறுத்தனர்.

மேலும் புதிதாக கோயில் கட்டும்போது, அதே இடத்திலேயே ஆபரணங்களை வைத்து விடப் போவதாகவும், அரசிடம் ஒப்படைக்க முடியாது என்றும் அவர்கள் கூறினர். இதையடுத்து, காஞ்சிபுரம் கோட்டாட்சியர் திவ்யா, உத்திரமேரூருக்கு நேரில் சென்று, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் நகைகளை ஒப்படைக்க கிராம மக்கள் மறுத்துவிட்டதால் காவல்துறையினருடன் சென்று நகைகளை கைப்பற்றும் நடவடிக்கை தொடங்கியது. இதனையடுத்து நகைகளை சீல் வைக்கப்பட்ட இரும்பு பெட்டியில் வைத்து கொண்டுச்சென்றனர்.

அப்போது கிராமத்தில் ஒரு தரப்பினர் நகைகளை கொண்டுச்செல்ல எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தினர். எனினும் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு நகைகள் அனைத்தும் கருவூலத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன் “100 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நகைகள் என்றால் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். நகைகளை காட்சிப்படுத்த வேண்டுமா அல்லது கோயிலில் வைக்க வேண்டுமா என்பதை அரசே முடிவு செய்யும் ” என்று கூறினார்.