தமிழ்நாடு

மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழக கலைஞர்கள் - மீட்க அரசுக்கு கோரிக்கை

மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழக கலைஞர்கள் - மீட்க அரசுக்கு கோரிக்கை

webteam

மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தங்களை மீட்குமாறு பூம்பூகாரை சேர்ந்த கோயில் சுதை சிற்ப கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்பூகார், சாயாவனம், மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த கோயில் சுதை சிற்ப கலைஞர்கள் 10 பேர் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் கோயில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் கடந்த மூன்று மாதங்களாக அங்கு கோயில் கடட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பணிகள் முடிந்து சொந்த ஊர் புறப்பட தயாராகி இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவர்கள் மகாராஷ்ட்ராவில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கியுள்ளனர். தற்போது ஒரு மாதம் கடந்த நிலையில் கையில் இருந்த காசும் செலவானதால் போதிய உணவும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

புறநகர் பகுதியில் சிக்கியுள்ளதால் அத்தியாவசிய தேவைக்கும், உணவு பொருள் மற்றும் அவசர தேவைக்கும் கூட பல கிலோமீட்டர் வரை நடந்தே செல்லும் நிலையில் உள்ளனர். எனவே தங்களை மீட்டு சொந்த ஊர் கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க வாட்ஸ்ஆப் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.