வேலூரில் பணிமனை அமைக்க இடம் கொடுத்தவருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாததால் நீதிமன்ற உத்தரவுப்படி 10 அரசுப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் போக்குவரத்து பணிமனை அமைப்பதற்காக கடந்த 1993-ஆம் ஆண்டு, ஆம்பூரைச் சேர்ந்த கிரிஜாம்மாளிடம் (74) அரசு போக்குவரத்து கழகம் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியது. இதற்கு உரிய இழப்பீடு வழங்காததால் கிரிஜாம்மாள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த நீதிமன்றம், கிரிஜாம்மாளுக்கு இழப்பீடாக சதுர அடிக்கு ரூ.48 வழங்கும்படி உத்தரவிட்டது.
அந்த வகையில் வட்டியுடன் சேர்த்து 1 கோடியே 75 லட்சம் போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும். ஆனாலும் இழப்பீடு வழங்காமல் போக்குவது அதிகாரிகள் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த வேலூர் மாவட்ட நிலம் ஆர்ஜிதம் நீதிபதி பக்தவக்சலு, 30 அரசு பேருந்துகளை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். அதனடிப்படையில் இன்று முதல் கட்டமாக வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.