தமிழகத்தில் மழை பொய்த்ததால் நீரின்றி பயிர்கள் கருகியுள்ளன. இந்த வேதனையில் நேற்று மட்டும் 10 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே அணுமத்தம்பட்டி கிராமத்தில் கண்ணன் என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தார். மதுரை உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி கிராமத்தில் பாண்டி என்ற விவசாயி பயிர் கருகிய விரக்தியில் விஷமருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரிய வண்ணாங்குப்பம் விவசாயி ராஜேந்திரன் மாரடைப்பால் உயிரிழந்தார். அரியலூர் ஒட்டக்கோயிலில் விவசாயி கலியபெருமாள், ஓலையூரில் விவசாயி சக்கரவர்த்தி ஆகியோரும் பயிர் கருகியதால் உயிரிழந்துள்ளனர்.
இதே போல், திருவாரூர் கொரடாச்சேரி அருகே பத்தூரில் விவசாயி நவசீலன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். தஞ்சை திருச்சேற்றுதுறையில் பெண் விவசாயி பாப்பாவும், பட்டுக்கோட்டையில் விவசாயி செல்வராஜும் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே சின்னபென்னாவூரில் வீட்டில் மயங்கி விழுந்து கணேசன் என்ற விவசாயி உயிரிழந்தார். ராமநாதபுரம் கமுதி அருகே டிவிஎஸ் புரத்தைச் சேர்ந்த விவசாயி சித்தையா வாடியப்பயிரைக் கண்டு மனம்வாடி மாரடைப்பால் காலமானார்.