தமிழ்நாடு

காய்ச்சலால் தொடரும் உயிரிழப்புகள்: கர்ப்பிணி பெண் உள்பட 10 பேர் உயிரிழப்பு

காய்ச்சலால் தொடரும் உயிரிழப்புகள்: கர்ப்பிணி பெண் உள்பட 10 பேர் உயிரிழப்பு

Rasus

தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக நேற்று 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாமக்கல்லைச் சேர்ந்த சாகுல், ஷகிலா பானு தம்பதியின் மூத்த மகளான பர்கிஷ் பானு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல, கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை அடுத்த கோவிலானூர் கிராமத்தைச் சேர்ந்த அருமைநாதன், மலேசியாவில் இருந்து தனது திருமணத்திற்காக விடுமுறையில் வந்திருந்தார். கடந்த வாரம்‌ புதன்கிழமை முதல் டெங்குவால் பாதிக்கப்பட்ட அருமைநாதன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் போடி சந்தைப்பேட்டையைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான ராஜேஸ்வரி, டெங்குவால் உயிரிழந்தார். அதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி சுரேஷின் 8 வயது மகள் ஜெயலட்சுமி, காய்ச்சலால் உயிரிழந்தார். சேலம் தனியார் மருத்துவமனையில் சிகி‌ச்சை பெற்று வந்த நாமக்கல்லைச் சேர்ந்த ஷெர்லி எனும் 11 மாத குழந்தை உயிரிழந்தது.

திருச்சி துறையூரை அடுத்த மாராடியில் டெங்கு காய்‌ச்சல் காரணமாக புவனேஸ்வரி எனும் பெண்ணும், ஈரோடு மாவட்டம் தேவபுரத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக 8-ஆம் வகுப்பு படித்து வந்த பார்வதி தேவி எனும் மாணவியும் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் கணபதிபட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவகி என்ற பெண் உயிரிழந்தார். மேலும், திருப்பூர் முதலிபாளையத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஏஞ்சலின், காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல, சென்னை புலியந்தோப்பு ராஜாத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தணிகை ராஜ், சுகந்தி தம்பதியின் 9 வயது மகன் சச்சின், டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார்.