கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் ஜாமீன் மனுக்களை தஞ்சை நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.
இவர்களின் ஜாமீன் மனு தஞ்சை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கதிராமங்கலத்தில் இன்னும் பதற்றம் தணியவில்லை எனக் கூறிய நீதிமன்றம் அவர்களின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 10 பேரும் வரும் 28ம் தேதி வரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இதனிடையே கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாகையில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலைக்கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கதிராமங்கலம் கிராமத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்கள் முழக்கமிட்டனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஷேல் கேஸ், மீத்தேன் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.