தமிழ்நாடு

திருமணமான ஒன்றரை ஆண்டில் மின்சாரம் பாய்ச்சி இளம்பெண் கொலை?

திருமணமான ஒன்றரை ஆண்டில் மின்சாரம் பாய்ச்சி இளம்பெண் கொலை?

webteam

சேலத்தில் திருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். 

சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெள்ளிப்பட்டரை அதிபரான பிரகாஷ் என்பவரின் மகன் வெங்கடேசனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மோனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த நான்காம் தேதி மோனிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோனிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமை காரணமாக ஏற்கனவே மோனிகா அடித்து துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது மின்சாரம் பாய்ச்சி மோனிகா கொலை செய்யப்பட்டிருதாகவும் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த செவ்வாய்ப்பேட்டை போலீசார், மோனிகாவின் கணவர் வெங்கடேசன் மற்றும் மாமனார் பிரகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மோனிகாவின் மரணம் தொடர்பாக இரங்கல் கூட்டம் நடத்திய அவரது குடும்பத்தினர் மற்றும் மகளிர் அமைப்பினர், சமூக செயற்பாட்டாளர்கள் 250க்கும் மேற்பட்டோர் திடீரென செவ்வாய்ப்பேட்டையில் உள்ள வெங்கடேசனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மோனிகாவின் மரணம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.