ஆவடி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த 1.5 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
ஆவடி அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் வசிப்பவர் அருள் (30). லாரி ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இளைய மகள் ருத்ரா திடீரென காணாததால் பெற்றோர் தேடியுள்ளனர்.
அப்போது குழந்தை வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
1.5 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.