தமிழ்நாடு

தமிழகத்தில் ‘பாதிக்கு பாதி’ உணவு கலப்படம் - அதிர்ச்சி ரிப்போர்ட்

webteam

இந்தியாவில் 2018-19ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3ல் ஒரு பங்கு உணவு கலப்படம் செய்யப்பட்டவை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உணவு தரம் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்ட்டது. இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், 2016-17 மற்றும் 2018-19ஆம் ஆண்டில் 8100 பேர் தரமற்ற உணவு விநியோகம் செய்தல் மற்றும் கலப்படம் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் ரூ.43.65 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். 

இந்த நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்டது என்றும் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் உணவுகளின் தரம் குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அந்த சோதனைகளின் படி, கடந்த 2017-18ஆம் ஆண்டில் அதிகம் கலப்படம் செய்யப்படும் மாநிலங்களாக உத்தப்பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் ஜம்மு காஷ்மீர் இருந்தன. 

2018-19ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 5,730 உணவு சோதனைகளில் 2,601 சோதனைகள் தோல்வி அடைந்துள்ளன. இந்திய அளவில் 99,000 சோதனைகளில் 24,000 சோதனைகள் தோல்வியடைந்திருக்கின்றன. இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு நுகர்வோர் பாதுகாப்பு மசோதா கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.