அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் தரப்பில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்
கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த துரைராஜ் - தேவிகா தம்பதியினரின் ஒன்றரை வயது மகன் சுமனுக்கு, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பதற்றமடைந்த பெற்றோர்கள், உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக கரிவலம்வந்தநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அங்கு பணியில் மருத்துவர்கள் எவரும் இல்லை எனக் கூறப்படுகிறது. "டாக்டர் இல்லை, வரவில்லை" என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாகவும், உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை கிடைக்காததாலும், 108 ஆம்புலன்ஸ் வசதி உடனடியாக இல்லாததாலும் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் மருத்துவ அதிகாரியிடம் கேட்டபோது, அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். "குழந்தை வரும் வழியிலே இறந்துதான் கொண்டு வந்தனர்'' என்று தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி உடனடியாகக் கிடைக்கவில்லை என்றாலும், சிறிது நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்ததாகத் தெரிகிறது. இது ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்பதால், குழந்தையை மேல் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அங்கிருந்த செவிலியர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் தலையிட்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இச்சம்பவம் குறித்து தமிழக அரசுக்கும் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் மருத்துவர்கள் தங்கிப் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், 24 மணி நேர 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.