தமிழ்நாடு

“நான் ஏன் தலைவராக கூடாது?” - லாலு பிரசாத் மூத்த மகன்

webteam

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவராக நான் ஏன் ஆககூடாது என லாலு பிராசத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தெரிவித்துள்ளார்.

பீகாரில் ஆளும் கூட்டணி கட்சியாக இருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம், நிதிஷ் குமார் பிரிந்து சென்ற பின்னர் எதிர்க்கட்சியானது. அத்துடன் அக்கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ் தீவன ஊழல் வழக்கில் சிறை சென்றார். இதற்கிடையே பீகாரின் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்ற பின்னர், எதிர்கட்சித் தலைவராக லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி பதவியேற்றார். அதே நேரம் அமைச்சரவையில் இருந்த லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் அமைச்சர் பதவி பறிபோனதால், சட்டமன்ற உறுப்பினராக மட்டும் ஆனார்.

தேஜ் பிரதாப் நீண்ட வருடங்களாக குடும்பப் பிரச்னையில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அவருக்கும், அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் விவகாரத்து ஆனது. இதனால் கடந்த சில மாதங்களாக கட்சிப் பணிகளில் தேஜ் பிரதாப் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அவருக்கும், அவரது தம்பியான தேஜஸ்விக்கும் இடையே அரசியல் வருத்தங்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த மோதல் இருவருக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதலே நிலவி வருகிறது. இதனால் தேஜ் பிரதாப் அவரது குடும்பத்தினருடன் சரியாக பேசிக்கொள்வதில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் முதலமைச்சர் நிதிஷ்குமார் தேஜ் பிரதாப்பிற்கு புதிய அரசு பங்களா ஒன்றை ஒதுக்கீடு செய்தார். அந்த பங்களா லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு செல்வதற்கு முன்னர் வரை தங்கியிருந்த பங்களாவாகும். அந்த பங்களாவிற்கு அருகே லாலுவின் மனைவியும், தேஜ் பிரதாப்பின் அன்னையுமான ராப்ரி தேவி தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின், ஜனதா தர்பார் நிகழ்ச்சியை தேஜ் பிரதாப் தொடங்கி வைத்தார். அத்துடன் லாலுவின் அறைக்கு சென்ற அவர், அவரது இருக்கையில் அமர்ந்து மக்களின் குறை மனுக்களை பெற்றுக்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், நீங்கள் ராஷ்ட்ரிய ஜனதாவின் தலைவராக தயாராகிவிட்டீர்களா என்ற கேள்வி நிருபர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய தேஜ் பிரதாப், “ஏன் ஆககூடாது. தலைவர் பதவி என்பது மக்களுடன் இருப்பது. நான் மக்களுக்காக இங்கே சேவை செய்கிறேன். பாட்னாவில் வசிக்கும் எங்கள் ஆதரவாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்த நான் விரும்பவில்லை” என்று கூறினார். கடந்த வருடன் பாட்னாவில் நடந்த ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசியக் கூட்டத்தில், அடுத்த சட்டப்பேரவை தேர்தலில்போது தேஜஸ்வியை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்போம் என்ற உறுதிமொழியை அக்கட்சியினர் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.