தமிழ்நாடு

”மைதானமே இல்லையே”-கிராமசபை கூட்டத்தில் மக்கள் கேள்வி

webteam

விழுப்புரம் கோலியனூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில், “விளையாட்டு மைதானமா எங்க இல்லையே” என வடிவேலுவின் பச்சைக்கிளி காமெடி பாணியில் அதிகாரிகளை கேள்விகளால் துளைத்தெடுத்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரகவளர்ச்சி உறுதி திட்டத்தின் கீழ் நிறைவேற்றபட்டதாக தணிகை கணக்குகளில் குறிப்பிடபட்ட பணிகள் எதுவும் நிஜத்தில் நடைபெறாததால் சிறப்பு கிராம சபையில் இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோலியனூர் ஊராட்சியில் இன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி பணிகளுக்கான தணிக்கை ஆய்வுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 2020-2022 ஆண்டுக்கான திட்டங்கள் வரவு செலவு கணக்குகள் கிராம பொதுமக்கள் முன்னிலையில் வாசிக்கபட்டது. அப்போது கோலியனூர் மாரியம்மன் கோவில் தெருவில் கபடி மற்றும் பூப்பந்து (badmiton) மைதானங்கள் அமைக்கப்பட்டதாகவும், அதற்கு 83 ஆயிரம் செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அங்கு எந்த ஒரு அடிப்படை பணிகளும் நடைபெறாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தணிக்கையாளர் பவானி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி இணையதளத்தில் அந்த பணிமுடிவுற்றதாக பணம் கையாடல் செய்யப்பட்டதாக ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.

மேலும் பணி முடிந்தாக தணிகை பதிவில் தீர்மானம் நிறைவேற்றினால் ஊர்மக்கள் அனைவரும் சிறப்பு கிராமசபையை புறக்கணித்து விடுவோம் என்று கூறியநிலையில் செய்வதரியாது தவித்த ஊராட்சி அதிகாரிகள் பணி நடைபெறவில்லை என தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமங்கள்) ஜானகி, அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் செலவு தொகையே 83 ஆயிரம் என்றும் பணி இன்னும் நிறைவடையவில்லை என்றும் தெரிவித்தார்.

பணி முழுமை பெற்றதாக கணக்குகள் மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி இணையதளத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது எப்படி என்று எழுப்பிய கேள்விக்கு? தணிக்கை கணக்குகளை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.