தமிழ்நாடு

‘'என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது”:35,000 ரூபாயை ஒப்படைத்த மாணவி; நெகிழ்ந்துபோன ஆசிரியர்

webteam

விழுப்புரம் மாவட்டத்தில் தொலைந்துபோன பணத்தை தலைமையாசிரியரிடம் ஒப்படைத்த மாணவிக்கு பள்ளி சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் மருத்துவமனை வீதியில் நகராட்சி உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார் ஷர்மித வர்ஷிணி. இவர் நேற்று முன் தினம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் கோவிந்தன், வர்ஷிணியின் தந்தையிடம் இந்தத் தகவலை தொலைப்பேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து பள்ளிக்கு வந்த வர்ஷிணியின் தந்தை, வர்ஷிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது வர்ஷிணி தனது தந்தையிடம் வளாகத்தின் தரையில் கிடந்த பர்ஸை எடுத்துக் கொடுத்துள்ளார். அதைத் திறந்து பார்த்தபோது உள்ளே 35,000 ரூபாய் பணம் இருந்துள்ளது. ஆனால் வர்ஷிணியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் அவசரத்தில் அதனை கையில் எடுத்து சென்று விட்டார் வர்ஷிணியின் தந்தை.

அதேநேரத்தில், கிராமத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள 9 மற்றும் 10 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அப்பள்ளியில் வைத்து பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த வகுப்பில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர், தனது பர்ஸை தவறவிட்டுவிட்டதாக தலைமையாசிரியரிடம் வந்து தெரிவித்துள்ளார். இதனால் அங்கு சிறிது நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்த சில மணி நேரங்களில் அங்கு வந்த வர்ஷிணியின் தந்தை, வளாகத்தில் கிடந்த பர்ஸை தனது மகள் தன்னிடம் அளித்ததாக கூறி அதனை தலைமையாசிரியர் கோவிந்தனிடம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பணம் ஆசிரியர் தொலைத்த பணம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பாதுகாப்பாக எடுத்துக்கொடுத்த வர்ஷிணிக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அவருக்கு 2000 ரூபாய் ஊக்கதொகையும் கொடுக்கப்பட்டது. இந்த பாராட்டு விழாவில் வர்ஷிணி விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

இதுகுறித்து பணத்தை தவறவிட்ட ஆசிரியர் கூறும்போது “ அவர்கள் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை அப்படியே எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அவர்கள் என்னிடம் பணத்தை திருப்பி கொடுத்தபோது எனது கண்களில் கண்ணீர் வந்து விட்டது, அது அவர்கள் பணத்தை திருப்பி கொடுத்ததற்காக இல்லை, இந்த உலகில் இன்னும் இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை நினைத்ததால்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்