தமிழ்நாடு

’நேரத்துக்கு பேருந்து எடு;டிக்கெட் ஏத்தணும்’-மினி பஸ் நடத்துனர் ஓட்டுநர்கள் இடையே கைகலப்பு

webteam

'நேரத்திற்கு பேருந்தை எடு என்னுடைய பேருந்தில் டிக்கெட் ஏற்ற வேண்டும்' என திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் மினி பஸ் நடத்துனர்,  ஓட்டுனர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் தாலுக்கா பகுதிகளுக்கு தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று நேரத்திற்கு எடுக்காமல் இருந்த மினி பேருந்து ஓட்டுனர், நடத்துனரை மற்றொரு மினி பேருந்து ஓட்டுனர் நடத்துனர் 'விரைவாக பேருந்து எடுங்கள் உங்கள் நேரத்திற்கு பேருந்து எடுங்கள் நாங்கள் டிக்கெட் ஏத்த வேண்டும்' என கூறி முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். பிறகு வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனது.

இரண்டு பேருந்து நடத்துனர்களும் ஓட்டுநர்களும் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள். இது பேருந்தில் ஏற வந்த பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னதாக திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மூன்று பேருந்து கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தார்கள். அது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற இந்த சம்பவம் பேருந்து பயணிகளை கவலை அடைய செய்துள்ளது. பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் கைகலப்பு ஈடுபட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.