சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ராகிங் செய்வதைத் தடுக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்லூரிகளில் சேரும் புதிய மாணவர்களை மூத்த மாணவர்கள் ராகிங் செய்வதை தடுக்க தனது தலைமையில் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் குழந்தைவேல் தெரிவித்துள்ளார். அந்தக் குழுக்களில், சேலம் கோகுலம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் அர்த்தநாரி, சூரமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் செந்தில் குமார், உதவி பேராசிரியர் லலிதா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் மாணவர்களிடம் ராகிங்கை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இதையும் தாண்டி ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தைவேல் தெரிவித்தார்.