தமிழ்நாடு

வைரலாகிறது இந்தித் திணிப்பை எதிர்க்கும் ஹேஷ்டேக்

வைரலாகிறது இந்தித் திணிப்பை எதிர்க்கும் ஹேஷ்டேக்

Rasus

#StopHindiChauvinism (ஹிந்தி ஆதிக்கத்தை நிறுத்துங்கள்) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

சமீபத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ஊர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது. இதனால், ஹிந்தி தெரியாத மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதன் மூலம் பாஜக ஆளும் மத்திய அரசு மறைமுகமாக ஹிந்தி திணிப்பில் ஈடுபட்டுள்ளது என கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் இணையதளத்தில் உள்ளவர்களும் ஹிந்தி திணிப்புக்கும் மத்திய அரசுக்கும் எதிராக பல கருத்துகளை கூறி வருகின்றனர். ஹிந்தியை இந்தியாவின் பொது மொழி ஆக்குவது குறித்து அண்ணா கூறிய கதையை நினைவு கூர்ந்துள்ளனர் நெட்டிசன்கள். “உலகம் முழுவதும் அனைவரிடமும் பேச ஆங்கிலம் வேண்டும். இந்தியாவிலும் பலருக்கு ஆங்கிலம் தெரியும். இதனால் ஏன் ஆங்கிலம் இந்தியாவில் பேசுவதற்கான பொது மொழியாக இருக்க கூடாது? உலகத்துடன் பேச ஆங்கிலமும் இந்தியாவில் பேச ஹிந்தியும் வேண்டுமா? இது பெரிய நாய் செல்ல ஒரு பெரிய கதவும், சிறிய நாய் செல்ல ஒரு சிறிய கதவும் அமைப்பது போல் உள்ளது. ஒரு பெரிய கதவை அமைத்தால், சிறிய நாயும் அதன் மூலம் செல்ல முடியும் அல்லவா?” என அண்ணா கூறிய கதைதான் இப்போது ட்விட்டரில் வைரல்.

“ஹிந்தியாமா அது எங்க ஊரு பானி பூரி கடைக்காரர்கள் பேசி கேட்ருக்கேன். ஏக்ப்ளேட் பாணிபூரி சாயியே கத்துக்கிட்டேன் போதும்” போன்ற கிண்டல்களுக்கும் குறைவில்லை.