தமிழ்நாடு

“எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக ஸ்டாலின் பொய் கூறுகிறார்” - தம்பிதுரை

“எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக ஸ்டாலின் பொய் கூறுகிறார்” - தம்பிதுரை

webteam

தமக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் கூறி வருவதாக கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

கரூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி போட்டியிடுகிறார். இதனால் அங்கு பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. தம்பிதுரைக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று வாக்கு சேகரித்துள்ளார். ஜோதிமணிக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இதுதவிர தம்பிரையும் பல இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று அவர் கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம், ராமானூர், மேலப்பாளையம், சணப்பிரட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவுக்கு வாக்கு கேட்டு பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “அண்மையில் கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலினும், கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்காக ஸ்டாலின் மீது வழக்கு தொடருவேன். அதிமுக சார்பில் நான் நிற்கிறேன். மக்கள்தான் வேட்பாளர். எனக்கு நீங்கள் ஓட்டுபோடவில்லை. இரட்டை இலைக்குத்தான் வாக்கு போடுகிறீர்கள்” என பேசினார்.