தமிழ்நாடு

"ஸ்டாலினுக்கு கள யதார்த்தம் தெரியவில்லை" அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

PT

அறைக்குள் அமர்ந்து அனைத்தையும் வாட்ஸப் மூலமாக பார்ப்பதால் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு களயதார்த்தம் தெரியவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஆவடித் தொகுதிக்குட்பட்ட ஆவடி திருமுல்லைவாயில், பருத்திப்பட்டு, பட்டாபிராம், திருநின்றவூர், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அங்கு 200க்கும் மேற்ப்பட்ட செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று அங்கு நேரில் சென்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அங்கு பணிபுரியும் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்களை கெளரவிக்கும் வகையில் அவர்களுக்குப் பொன்னாடைப் போர்த்தி நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “ தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக் கட்டுக்குள் இருப்பதற்கு அரசும் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புமே முக்கியக் காரணம். கொரோனா தொற்றைப் பொறுத்தவரை தற்போதுள்ள சூழல் நீடித்தால் சில தளர்வுகளுடன் அடுத்தக் கட்ட ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது.



அரசின் தவறான நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்ற ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் " ஸ்டாலினின் இந்தக் கருத்து தவறு என்பது அவரது மனசாட்சிக்கே தெரியும். ஆரம்பத்தில் அரசின் செயல்பாடுகளை அவரே பாராட்டியுள்ளார். இந்தக் கருத்தின் மூலம் அவர் களபணியில் உள்ள மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பை கொச்சைப்படுத்துகிறார். அறைக்குள் அமர்ந்து அனைத்தையும் வாட்ஸப் மூலமாக பார்ப்பதால் களயதார்த்தம் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. மீண்டும் மீண்டும் பிரஷாந்த் கிஷோர் சொல்வதை கேட்டு செயல்படுகிறார்.” என்றார்