தமிழ்நாடு

“முகிலனை காணவில்லை” - நோட்டீஸ் ஒட்டியது சிபிசிஐடி

webteam

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை காணவில்லை என சிபிசிஐடி அறிவிப்பு நோட்டீஸை பல இடங்களில் ஒட்டியுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல்போய் சுமார் ஒரு மாதம் ஆகிவுள்ளது. இதுதொடர்பான வழக்கை தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகிறனர். இந்நிலையில் சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிவிப்பு நோட்டீஸில், “சென்னை சிபிசிஐடி குற்ற எண் 2/2019-ன் படி, 15.02.2019 அன்று இரவு சென்னை-மதுரை மகால் விரைவு இரயிலில் பயணம் செய்ய, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றார். அங்கு சென்றவர் காணாமல் போய் உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முகிலன் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில்,

“பெயர் : முகிலன்

வயது : 52

நிறம் : கருப்பு நிறம்

உயரம் : சுமார் 5 3/4 அடி

உடை : காணாமல் போன அன்று வெளிர் பச்சைநிற முழுக்கை சட்டை, வெளிர் பழுப்பு (பிரவுன்) நிற பேண்ட் அணிந்திருந்தார். முதுகில் போடும் பேக் ஒன்றும் வைத்திருந்தார். 

இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் சென்னை சிபிசிஐடி எழும்பூர் அலுவலகத்தில் அல்லது சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறை எண் : 044 28513500-ல் தகவல் கொடுக்கலாம்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார். 

செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை காணவில்லை என்று கூறப்படுகிறது. முகிலனுக்கு ஆதரவாக பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.