தமிழ்நாடு

”மாஸ்க் இல்லையா ரூ200, சமூக இடைவெளி இல்லையா ரூ500 அபராதம்” - புதுக்கோட்டை ஆட்சியர்!

sharpana

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாயும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 500 ரூபாயும் அபதாரம் விதிக்கப்படும் என்று புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 18 ம் தேதி ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, அதன் பின்பு அதிதீவிரமாக பரவி இதுவரையில் 11 ஆயிரத்து 700 பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.157 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதமாக நோய் தோற்று குறைந்து நாளொன்றுக்கு ஒரு நபர் முதல் இரு நபர்கள் வரையில் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று ஒரே நாளில் மட்டும் எட்டு பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 பேர் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கொரோனா பெருந்தொற்று நோய் தீவிரமாக பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது தமிழ்நாடு பொதுசுகாதாரச்சட்டம் 1939ன்படி அரசு அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத மக்களுக்கு ரூ.200 ரூபாயும் சமூக இடைவெளியினை கடைபிடிக்க தவறும் மக்களுக்கு ரூ.500ம் அபராதம் விதிக்கப்படும் என்றும் மேலும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாத பட்சத்தில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டப உரியாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் புதுக்கோட்டை ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு அபதாரம் விதித்தால்தான் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்றும் இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.