கோயில்களுக்கு சொந்தமான 600 ஏக்கரை மட்டுமே ஏழைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், நிலங்களை வழங்கும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்ற அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி, தமிழக வருவாய்த் துறை துணைச் செயலாளர் எஸ்.ஆனந்தன் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழகம் முழுவதும் உள்ள கோவில் நிலங்களில், 19 ஆயிரத்து 717 குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்களில், 600 ஏக்கர் நிலங்களில் மட்டுமே ஏழைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பட்டா வழங்கும் போது கோயிலின் வருமானத்திற்கும், பூஜைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளது. எனவே, அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி அந்த வழக்கை தள்ளுப்படி செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.