தமிழ்நாடு

“உங்கள் காலில் மண்டியிட்டு கேட்கிறேன்; ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்க” - இறந்தவரின் கடிதம்!

webteam

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால், மனம் உடைந்த சென்னை கேகே நகரை சேர்ந்த நபர் ஒருவர், மனைவிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கேகே நகர் சேர்ந்த சுரேஷ் என்பவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீதுள்ள மோகத்தால், அதிகளவு பணத்தை கட்டி விளையாடி வந்துள்ளார். பணத்தை இழக்க இழக்க, அதை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என தொடர்ந்து பணத்தை போட்டு விளையாடிய சுரேஷ், சுமார் 16 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக தெரிகிறது. எவ்வளவு முயற்சித்தும் விட்ட பணத்தை திரும்ப மீட்க முடியாததால், மனம் உடைந்த சுரேஷ் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். மனவேதனையின் உச்சத்தில் இருந்த சுரேஷ், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது மனைவி ராதாவிற்கு கடிதம் எழுதிவிட்டு மாயமாகியுள்ளார்.

இந்நிலையில், சுரேஷ் காணாமல் போனது குறித்து, அவருடைய மனைவி ராதா, கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கேகே நகர் காவல் துறையினர் சுரேஷை தேடி வந்த நிலையில், இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலையின் பின்புறம் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்ததன் பேரில் அங்குசென்ற காவல்துறையினர், உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அது சுரேஷ் தானா என அடையாளம் காணுவதற்கு, காணாமல் போன சுரேஷின் மனைவி ராதாவை அழைத்து அடையாளம் காட்டினர். இந்நிலையில் உயிரிழந்தது சுரேஷ் தான் என்பதை ராதா உறுதிப்படுத்திய நிலையில், தற்கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மனம் உடைந்த சுரேஷ் தன் குடும்பத்தாருக்கு கடிதம் எழுதியது மட்டுமில்லாமல், முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் எழுதிய அந்த கடிதத்தில், ”அன்புள்ள அப்பா, அம்மா மற்றும் அம்மு, என் குழந்தைகள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள், உங்கள் அனைவரையும் நான் ஏமாற்றிவிட்டேன். எனக்கு வாழ தகுதியில்லை. எனவே நான் சாகபோகிறேன். ஆண்டவன் எனக்கு அழகான குடும்பத்தை கொடுத்தான், ஆனால் நான் அதனை பயன்படுத்தவில்லை. நான் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து விட்டேன், அதிலிருந்து என்னால் மீள முடியவில்லை. அம்மு உன்கிட்ட மன்னிப்பு கேட்க எனக்கு தகுதி இல்லை. எனக்காக நீ அனைத்தையும் இழந்து இருக்கிறாய். அடுத்த பிறவியில் உன்னை பார்த்து கொள்வேன், என்னை மன்னித்துவிடு. அக்கா மற்றும் சந்தோஷ் நீங்கள் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளீர்கள், நீங்களும் என்னை மன்னித்துவிடுங்கள். என் பிள்ளைகளையும் அப்பா அம்மாவையும் பார்த்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரிடம் இருந்தும் பிரியா விடைபெறுகிறேன். மதிப்பு மிக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு, தயவு செய்து இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். உங்கள் காலில் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன். என்னை போல் பல பேர் குடும்பத்தை அனாதையாக விட்டு செல்கிறார்கள். இனி யாருக்கும் இந்த நிலைமை வர கூடாது, தயவு செய்து தடை செய்யுங்கள்” எனு எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஏற்கனவே நேற்று முன்தினம் சென்னை தாம்பரம் மாடம்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது ஆன்லைன் ரம்மிக்கு மற்றொரு பலி ஏற்பட்டுள்ளது.