தமிழ்நாடு

”முதல்வராக அல்ல, ரசிகராகவே வந்தேன்”- தோனியை பாராட்டு மழையில் நனைத்த முதல்வர் ஸ்டாலின்

”முதல்வராக அல்ல, ரசிகராகவே வந்தேன்”- தோனியை பாராட்டு மழையில் நனைத்த முதல்வர் ஸ்டாலின்

நிவேதா ஜெகராஜா

2021 ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்க பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சென்னை என்றாலே, சூப்பர்தான். அதை மீண்டுமொரு நிரூபிக்கும் வகையில் இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி நிரூபித்துள்ளது. அவர்களை பாராட்டவே இந்த நிகழ்ச்சி” என்று கூறி அவரது உரையை தொடங்கினார்.

தொடர்ந்து பேசுகையில், “இந்தியா சிமெண்ட் சீனிவாசன், முதலமைச்சராக இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வேண்டும் என என்னை அழைத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்றுதான் நான் வந்திருக்கிறேன் என்றாலும்கூட, நான் முதல்வராக இங்கு வரவில்லை; தோனியின் ரசிகனாகவே வந்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, என் பேரன் பேத்திகள் கூட வந்திருக்கிறார்கள். எல்லோரும் அவருடைய ரசிகர்கள். நாங்கள் மட்டுமல்ல. மறைந்த என்னுடைய அப்பா கருணாநிதியும் தோனியின் ரசிகர்தான். ஆகவே நான் மிகுந்த மகிழ்ச்சியுடன், பெருமையுடன், பூரிப்புடன் இங்கே வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பளித்துள்ள சீனிவாசனுக்கு, உளமாற என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ள பாதிப்புகளை எப்படி சரிசெய்வது, எப்படி நிவாரணத்தை கொடுப்பது என்றுதான் எண்ணம்தான் மனதில் இருக்கிறது. நெருக்கடியான இந்த நேரத்தில், சற்று இளைபாற இந்த நிகழ்ச்சியில் கலந்திருக்கிறேன். ‘கோட்டையில் இருந்தாலும் குடிசையை பற்றியே நினைத்திருக்க வேண்டும்’ என்றுகூறியே எங்களையெல்லாம் உருவாக்கிய கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார். ஆகவே அதை மறக்க மாட்டேன்.

நானும் கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள நபர் தான். சென்னையில் நான் மேயராக இருந்தபோது, காட்சி போட்டிகளில் விளையாடியுள்ளேன். போட்டிகளை நடத்தியும் உள்ளேன். இந்திய அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றபோது, அதை வழிநடத்திய வீரர் கபில்தேவ் இடம்பெற்ற ‘கார்கில் போர் நிதிதிரட்டும் காட்சி கிரிக்கெட் போட்டி’யில் சேப்பாக்கம் மைதானத்தில் அவரோடு நான் விளையாடியுள்ளேன். கபில்தேவ்க்குப் பிறகு, இந்திய அணிக்கு கோப்பையை வென்ற கொடுத்திருக்கிறார் தோனி.

தோனியின் சொந்த மாநிலம் ஜார்கண்ட் என்றபோதிலும், அவர் தற்போது தமிழ்நாட்டுக்காரர் போலவே ஆகிவிட்டார். தமிழ்நாட்டு மக்களின் செல்லப்பிள்ளையாகவே ஆகிவிட்டார் அவர். தலைவர் கருணாநிதி போலத்தான் தோனியும்... அவரைப்போலவே இவரும் கூலாக இருப்பார்; நேர்த்தியாக வழிநடுத்துவார்; அணியை மீட்டெடுப்பார்.

தோனியின் தொடக்க கால நீண்ட தலைமுடி முதல் இன்றுவரை அவரின் ஹெலிகாப்டர் ஷாட் வரை தனது ஒவ்வொரு அசைவிற்கும் ரசிகர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார் தோனி. இந்தியாவில், கிரிக்கெட் என்றால் டெண்டுல்கர் என்பதை கிரிக்கெட் என்றால் தோனி என்ற திசையில் மாற்றியவர் அவர். இந்தியாவின் ஒரு சிறு கிராமத்திலிருந்து இன்று இவ்வளவு பெரிய உச்சத்தை அடைந்திருக்கிறார் அவர்! சாதாரண பின்புலத்திலிருந்து அசாதாரணமான நிலையை அடைந்தவர் என்பதால்தான், தமிழக மக்கள் அவரை இவ்வளவு கொண்டாடுகின்றனர். தமிழர்கள் எல்லோரும் ‘பச்சை தமிழர்’ என்றால், தோனி ‘மஞ்சள் தமிழர்’.

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ‘ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு அறிவிப்பை வெளியிட்டு சிக்சர் அடிக்கிறார்’ என என்னை சொல்கிறார்கள். அதை கேட்கும்போதெல்லாம் தோனியை மனதில் நினைத்துக்கொள்வேன். தோனியை தலைசிறந்த விக்கட் கீப்பர் - விளையாட்டு வீரர் என்று சொல்வதை விட, திறமையான கேப்டன் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஏனெனில் தனியொரு ஆளாக ஒரு என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் கேப்டனாக இருப்பது கடினம்.

எப்போதுமே இலக்கு தான் முக்கியம். அதை அடைய உழைப்பு முக்கியம். இலக்கும் உழைப்பும் ஒன்றாக இருப்பவர்களை, யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியானவர்தான் தோனி. தோனி... இன்னும் பல சீசன்களுக்கு சி.எஸ்.கே. அணியை வழிநடத்த வேண்டும் நீங்கள்!” எனப் அமைர் முதல்வர்!