தமிழ்நாடு

”கூட்டுறவுத்துறை வளர்ச்சியில் நிதியமைச்சராக எனக்கு திருப்தியில்லை”-அமைச்சர் பிடிஆர் பேச்சு

webteam

கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் நிதியமைச்சராக தனக்கு திருப்தியில்லை என்றும், கடத்தல்கள் அதிகமாக நடப்பதாக செய்திகள் வருகிறது என்றும் கூட்டுறவுத்துறை வார விழா நிகழ்ச்சியிலேயே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், மடீட்சியா அரங்கில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிகையில், “கூட்டுறவுத்துறையின் செயல்பாடு கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாக உள்ளது என்றாலும், தற்போதைய செயல்பாட்டு திறன் மற்றும் தகவல்தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். கூட்டுறவுத்துறையில் தினமும் ரெய்டுகள் நடத்தப்பட்டு கடத்தல்கள் அதிகரிப்பதாக பல செய்திகள் வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் முழுமையான கணிணி மயமாக்கப்படாமல் இருப்பதால் தான் பல பிழைகள் நடைபெறுகிறது. நடமாடும் ரேசன்கடைகளில் பொருட்கள் உரிய நேரத்திற்கு செல்வதில்லை. நிதியமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகள் எனக்கு திருப்திகரமாக இல்லை” என்று வேதனை தெரிவித்தார்.

மேலும், “எனது தாத்தா மற்றும் தந்தை கூட்டுறவு சங்கங்களில் தலைவராக இருந்துள்ளனர். எனக்கு கூட்டுறவுத்துறையில் தனிப்பட்ட ஆர்வம் உள்ளது. உலகளாவிய அளவில் நமது கூட்டுறவுத்துறை செயல்படும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன், எம்எல்.ஏ பூமிநாதன், வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.